காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் இளம்சிறார் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவு


காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் இளம்சிறார் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவு
x
தினத்தந்தி 6 April 2017 11:15 PM GMT (Updated: 6 April 2017 5:00 PM GMT)

காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடலூர்,

கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளஞ்சிறார் காவல் அலகு போலீசாருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

உடனடி நடவடிக்கை

மாவட்டம் முழுவதும் இளஞ்சிறார் காவல் அலகில் 46 போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களை சீருடை அணியாமல் (சாதாரண உடை அணிந்து) கையகப்படுத்தி, அவர்களை சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த வேண்டும். சிறார் விடுதிகளில் அடைக்கும் போதும் போலீசார் சீருடை அணியாமல் செல்ல வேண்டும்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் காணாமல் போனதாக புகார் அளிக்க வருபவர்களிடம் இந்த சிறப்பு குழுவினர் தான் விசாரிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகளிடமும் சீருடை அணியாத போலீசார் தான் விசாரிக்க வேண்டும். குழந்தைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் அவர்களை கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறுவர், சிறுமிகளை பாதுகாப்பாக நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும் பொறுப்பும் உள்ளது.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பேசினார்.

பாதுகாப்பு

பயிற்சியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை அரசின் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் குளோரி குணசீலி, வக்கீல் மன்றவாணன் ஆகியோர் அளித்தனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு, இந்த திட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கி பேசினர்.

இதில் மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு சிட்டிபாபு, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் சுகுணா, நன்னடத்தை அலுவலர் பிரபு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் டெய்சி, துர்கா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார், மாலா மற்றும் இளஞ்சிறார் காவல் அலகு போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story