போடி அருகே, குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


போடி அருகே, குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-06T22:59:00+05:30)

போடி அருகே குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

போடி,

தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் விவசாய கூலித் தொழிலாளர்களாகவும், ஆடு, மாடுகள் வளர்த்தும் வருகிறார்கள். இந்த கிராமத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள மங்களகொம்பு மலைப்பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கரட்டுப்பட்டி கிராமத்துக்கு கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதையொட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மங்களகொம்பு பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு தண்ணீர் சென்றது தெரிய வந்தது.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்து மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புகார் தெரிவித்து பல நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கரட்டுப்பட்டி கிராம மக்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நேற்று காலையில் கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story