ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 2 ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும், தீர்ப்பும் வழங்கவில்லை


ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 2 ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும், தீர்ப்பும் வழங்கவில்லை
x
தினத்தந்தி 6 April 2017 11:15 PM GMT (Updated: 6 April 2017 5:45 PM GMT)

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 2 ஆண்டுகளாகியும்

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படவேடு வேட்டகிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார், முருகன், பெருமாள், முருகாபாடி மூர்த்தி, முனிசாமி, காந்திநகர் மகேந்திரன், காளசமுத்திரம் பழனி ஆகிய 7 பேர் உள்பட 20 பேரை கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திருப்பதி காட்டில் செம்மரம் வெட்டி கடத்தியதாக ஆந்திர மாநில வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரையும் ஆந்திர மாநில வனத்துறையினர் சித்ரவதை செய்து கொன்றதாகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சி.பி.ஐ. விசாரனை மற்றும் நிவாரண உதவி கோரியும் ஆந்திர அரசுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருப்பதி கோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் சார்பில் சசிகுமாரின் மனைவி முனியம்மாள் என்பவர் கொடுத்த புகார் தொடர்பான வழக்கு கீழ்திருப்பதி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடைபெற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எவ்வித தீர்வும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்னும் கிடைக்கவில்லை. வழக்கு சம்பந்தமாக அடிக்கடி திருப்பதி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக அரசு உதவி

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவியும், சத்துணவு வேலையும் வழங்கி உள்ளதால் ஓரளவு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் ரூ.3 லட்சம் நிதியுதவியும் சத்துணவு சமையலர் வேலையும் வழங்கினார்.

இதில், பாதிக்கப்பட்ட சசிகுமார் மனைவி முனியம்மாள் படவேடு காளிகாபுரம் பள்ளியிலும், முருகன் மனைவி தஞ்சியம்மாள் படவேடு நடுநிலைப்பள்ளியிலும், பழனி மனைவி லோகேஸ்வரி காளசமுத்திரம் பள்ளியிலும், மகேந்திரன் தாய் சித்ரா பள்ளக்கொல்லை பள்ளியிலும், பெருமாள் மனைவி செல்வி, முருகாபாடி மூர்த்தி மனைவி பச்சியம்மாள், முனுசாமி மனைவி தஞ்சியம்மாள் ஆகியோர் பல்வேறு அரசு பள்ளிகளிளும் சத்துணவு சமையலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

நல்ல தீர்ப்பு கிடைக்கும்

இதுகுறித்து சசிகுமார் மனைவி முனியம்மாள்(வயது 35) கூறுகையில், எனது கணவர் சசிகுமார் இறந்த செய்தி கேட்டு கைக்குழந்தையுடன் மிகவும் துயரமுற்றேன். அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவியுடன் வேலைவாய்ப்பு வழங்கி ஆதரவு தந்தார். ஆனால் ஆந்திர அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எவ்வித கருணையும் காட்டாமல் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். வழக்குக்காக அடிக்கடி திருப்பதி சென்று வருவது பெரும் சிரமமாக உள்ளது.

தற்போது மக்கள் கண்காணிப்பகம் உதவியுடன் வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார். இதேபோன்று லோகேஸ்வரியும், முருகன் மனைவி தஞ்சியம்மாளும் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

Next Story