திண்டுக்கல்லில் பரிதாபம் வெயிலின் கொடுமையால் 2 முதியவர்கள் சுருண்டு விழுந்து சாவு


திண்டுக்கல்லில் பரிதாபம் வெயிலின் கொடுமையால் 2 முதியவர்கள் சுருண்டு விழுந்து சாவு
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-07T00:23:33+05:30)

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்திலேயே வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. திண்டுக்கல்லில் தொடர்ந்து 10 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் 101.3 டிகிரியும், நேற்று 102.5 டிகிரியும் பதிவானது.

இதன்காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டபோதும், மாணவர்களின் நடமாட்டத்தை காண முடிவதில்லை. மேலும், பகலில் வெளியே வரவும் பொதுமக்கள் தயங்குகின்றனர். இதனால் பஸ்நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மயங்கி விழுந்த முதியவர்

இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 63) என்பவர் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் ஆத்தூர் அருகே உள்ள மாலைப்பட்டியில் வசித்து வரும் தனது மகன் வீட்டுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கடுமையான வெயில் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, நேற்று பஸ்நிலையம் அருகே உள்ள ஏ.எம்.சி. சாலையில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்கிய அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

கண்டுகொள்ளாத மக்கள்

ஆனால் அந்த வழியாக சென்ற யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார். உடனே சிலர் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய பெயர், விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல திண்டுக்கல் எழில்நகர் அருகே ரெயில்வே மருத்துவமனை உள்ளது. இதன் அருகே உள்ள மழைநீர் கால்வாயில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று விசாரித்தபோது, முதியவர் கடுமையான வெயிலால் சுருண்டு விழுந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவருடைய பெயர், விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story