கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் அருகே காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் அருகே காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 6:57 PM GMT)

கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் அருகே, குடிநீர் கேட்டு கலெக்டர் டி.ஜி.வினயை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஸ்ரீராமபுரத்தில் உள்ள கோபாலசமுத்திரம் கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் அதிகாரிகள் சென்றனர். செட்டியபட்டி அருகே அவர்கள் சென்ற போது கட்டசின்னாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கடந்த பல வாரங்களாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

கலெக்டரை முற்றுகை

இதே போல் ஒட்டன்சத்திரம் தாலுகா காவேரிஅம்மாபட்டியில் பால்பண்ணை நடத்தி வரும் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பசுந்தீவனம் உற்பத்தி முறை குறித்த பயிற்சி முகாமை தொடங்கி வைப்பதற்காக கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கலெக்டரை முற்றுகையிட்டனர். பின்னர் தங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இங்குள்ள புறம்போக்கு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த பணிகளை முழுமையாக முடித்தால் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கும் என்றனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story