ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 29 பேர் காயம்


ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 29 பேர் காயம்
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-07T02:06:02+05:30)

கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 29 பேர் காயம் அடைந்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூர் அருகே உள்ள மீனம்பட்டியில் முனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் அருகே உள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக காளைகளை கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

அதனை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களை கொம்பால் முட்டி தூக்கி வீசி பந்தாடின. ஜல்லிக்கட்டில் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 380 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 202 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

29 மாடுபிடி வீரர்கள் காயம்

இதில் காளைகள் முட்டியதில் மேலபுலன்காட்டை சேர்ந்த ரெங்கநாதன்(வயது 39), மோளுடையான்பட்டியை சேர்ந்த ஜெகதீஸ்(20), முதுகுளத்தை சேர்ந்த வினோத்(25), காட்டுநாவலை சேர்ந்த அறிவழகன்(21), அங்கன்விடுதியை சேர்ந்த சுரேஷ்(21), கணபதிபுரத்தை சேர்ந்த குமாரவேல்(21) உள்பட 29 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் படுகாயமடைந்த ரெங்கநாதன் மட்டும் அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிசுகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், கிரைண்டர், மின்விசிறி, மிக்சி உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை உதவி கலெக்டர் அம்ரீத், கறம்பக்குடி தாசில்தார் யோகேஸ்வரன் உள்பட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை, கறம்பக்குடி, துவரங்குடி, கந்தர்வகோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சரக்கு ஆட்டோ, லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் வந்து, ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். 

Next Story