பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரி ஆய்வு


பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2017 8:36 PM GMT (Updated: 2017-04-07T02:06:05+05:30)

பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரி ஆய்வு

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு, ஸ்மார்ட் வகுப்பறைகள், மாணவ-மாணவிகளுக்கு தினசரி பாடத்தேர்வுகள், பள்ளித்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறையின் அரசு செயலர் உதயசந்திரன், மாவட்ட கலெக்டர் நந்தகுமார் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். அந்தூர் நடுநிலைப்பள்ளி, வரகூர் உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி, குன்னம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை ஆய்வு செய்தார். இதேபோல், மாணவ- மாணவிகளுக்கு தினமும் நடத்தப்படும் குறுந்தேர்வு குறித்தும், அதன் பயன்பாடுகள், தினசரி செய்தித்தாள் வாசித்தல் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சூப்பர்-30 வகுப்பு மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தொடக் கக்கல்வி இணை இயக்குனர் சசிகலா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) செந்தமிழ்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story