கடலில் தவறி விழுந்து, வீட்டிற்கு சென்று தூங்கியவரை விடிய, விடிய கடலில் தேடிய நண்பர்கள்


கடலில் தவறி விழுந்து, வீட்டிற்கு சென்று தூங்கியவரை விடிய, விடிய  கடலில் தேடிய நண்பர்கள்
x
தினத்தந்தி 6 April 2017 8:51 PM GMT (Updated: 6 April 2017 8:51 PM GMT)

கடலில் தவறி விழுந்து வீட்டிற்கு சென்று தூங்கியவரை அவரது நண்பர்கள், தீயணைப்பு வீரர்களுடன் விடிய, விடிய கடலில் தேடிய ருசிகர சம்பவம் பாந்திராவில் நடந்துள்ளது.

மும்பை,

கடலில் தவறி விழுந்து வீட்டிற்கு சென்று தூங்கியவரை அவரது நண்பர்கள், தீயணைப்பு வீரர்களுடன் விடிய, விடிய கடலில் தேடிய ருசிகர சம்பவம் பாந்திராவில் நடந்துள்ளது.

கடலில் விழுந்தார்

மும்பை பாந்திரா ரெக்லமே‌ஷன் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சஞ்சய் சுக்லா. இவர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தனது வேலை பறிபோக அவருடன் வேலை பார்த்த நண்பர் ரகீம் சேக் தான் காரணம் என கருதினார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சஞ்சய் சுக்லா, ரகீம் சேக் மற்றும் மற்றொரு காவலாளி லெட்சுமண் பாண்டே ஆகியோருடன் பாந்திரா கடற்கரையில் உள்ள பாறை மீது அமர்ந்து மது அருந்தினார்.

இதில், போதை தலைக்கேறியதும் சஞ்சய் சுக்லா தனது வேலை பறிபோக ரகீம் சேக் தான் காரணம் என கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டானது. லெட்சுமண் 2 பேரையும் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சஞ்சய் சுக்லா கடலில் தவறி விழுந்தார்.

விடிய விடிய தேடினர்

உடனடியாக மற்ற 2 பேரும் கடலில் விழுந்தவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடன் இருந்தவர் கடலில் மூழ்கி மாயமானதால் பதறிப்போன அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடலில் விழுந்த சஞ்சய் சுக்லாவை தேடினர்.

ஆனால் தீயணைப்பு படையினராலும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. விடிய, விடிய நடந்த தேடுதல் வேட்டை தோல்வியில் தான் முடிந்தது.

பழிவாங்க வீட்டிற்கு சென்றார்

நண்பன் கடலில் விழுந்து மாயமானதை எப்படி அவரது குடும்பத்தினரிடம் சொல்வது என ரகீம் சேக், லெட்சுமண் ஆகியோர் தயங்கினர். எனினும் காலையில் கலக்கத்துடன் சஞ்சய் சுக்லாவின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேசினர். அப்போது சஞ்சய் சுக்லாவின் மனைவி கூறிய பதில் அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது முன்தினம் இரவே கணவர் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், தற்போது அயர்ந்து தூங்குவதாகவும் கூறினார்.

இதையடுத்து நடந்த விசாரணையில், கடலில் விழுந்த சஞ்சய் சுக்லா ஒரு பாறையை பிடித்து உயிர் பிழைத்துள்ளார். அப்போது நண்பர்கள் 2 பேரும் கடலில் இறங்கி தன்னை தேடுவதை பார்த்தார். எனவே அவரின் வேலை போக காரணமாக இருந்த நண்பனை பழிவாங்க நீச்சல் அடித்து கரைக்கு வந்து நைசாக வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.


Next Story