மதுக்கடை அமைக்க எதிர்ப்பு வலுக்கிறது: மதகடிப்பட்டில் நரிக்குறவர்கள் சாலைமறியல்


மதுக்கடை அமைக்க எதிர்ப்பு வலுக்கிறது: மதகடிப்பட்டில் நரிக்குறவர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-07T02:35:34+05:30)

மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதகடிப்பட்டில் நரிக்குறவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருபுவனை,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது. அதன்பேரில் விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு, திருபுவனை பகுதியில் இருந்த 8 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகள் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நரிக்குறவர்கள் போராட்டம்

இந்தநிலையில் மதகடிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நரிக்குறவர் காலனி பகுதியில் மதுக்கடை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் இடம் சமப் படுத்தப்பட்டது. இதற்கு நரிக் குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 150 குடும்பங்கள் வசிக் கும் இப்பகுதியில் மதுக்கடை அமைத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அவர்கள் நேற்று காலை மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் அரசு, தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்காமல் நரிக்குறவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது அங்கிருந்த நரிக்குறவ சிறுவர்கள் மற்றும் சிலர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேன்களை போலீசார் பறித்தனர்.

அப்போது அங்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வெங்கடேசன், போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மதுக்கடை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு நரிக்குறவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story