காளியம்மன் கோவில் குண்டம் விழா ஆண் பக்தர்கள் மட்டுமே தீ மிதித்தனர்


காளியம்மன் கோவில் குண்டம் விழா ஆண் பக்தர்கள் மட்டுமே தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 6 April 2017 10:30 PM GMT (Updated: 6 April 2017 9:07 PM GMT)

கோபி அருகே உள்ள காசிபாளையம் கரிய காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆண் பக்தர்கள் மட்டுமே தீ மிதித்தனர்.

கடத்தூர்,


கோபி அருகே காசிபாளையத்தில் பிரசித்தி பெற்ற கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 23–ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. 31–ந் தேதி கோவிலில் நந்தா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், 3–ந் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.

நேற்று முன்தினம் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு பூத வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

தீ மிதித்தனர்


முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட 60 அடி நீள குண்டத்தில் தலைமை பூசாரி அருணாச்சலம் காலை 6 மணி அளவில் முதன் முதலாக தீ மிதித்து தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து ஆண் பக்தர்கள் மட்டுமே தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பல ஆண் பக்தர்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கியது அங்கிருந்த மற்ற பக்தர்களை பக்தி பரவசப்படுத்தியது. இதேபோல் ஏராளமான சிறுவர்களும் குண்டம் இறங்கினர்.

விழாவில் காசிபாளையம், சிங்கிரிபாளையம், கொடிவேரி, கணபதிபாளையம், காராப்பாடி, காந்தி நகர், பள்ளம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது.


Next Story