திருச்சி அரசு மருத்துவமனை கண் மருத்துவ பிரிவு அறையில் தீ விபத்து


திருச்சி அரசு மருத்துவமனை கண் மருத்துவ பிரிவு அறையில் தீ விபத்து
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-07T02:45:54+05:30)

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண் மருத்துவ பிரிவில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த ஏ.சி., குளிர்பதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கண் மருத்துவ பிரிவுக்கு என தனியாக கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் கண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி அறை, அறுவை சிகிச்சை செய்ய தனி அறை, கண் மருத்துவ பிரிவின் தலைமை டாக்டர் பார்த்தீபனுக்கு தனி அறை உள்ளிட்ட பல்வேறு அறைகள் உள்ளன. நேற்று அந்த கட்டிடத்தில் தங்கியிருந்து 6 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு கண் மருத்துவ பிரிவின் தலைமை டாக்டர் பார்த்தீபன் நேற்று காலை சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது அறையை பூட்டி விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் டாக்டர் பார்த்தீபன் அறையில் இருந்து கரும்புகை ஜன்னல் வழியாக வெளியே வந்தது. இதனை கண்ட அறுவை சிகிச்சை செய்யும் அறையில் இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களையும் அழைத்து கொண்டு உடனடியாக வெளியே வந்தனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அந்த அறை தீப்பிடித்து எரிய தொடங்கியது.

போலீசார் விசாரணை

இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அந்த கட்டிடத்திற்கு செல்லும் மின்சாரத்தை உடனடியாக நிறுத்தினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் இது குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அந்த அறையில் இருந்த குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்), குளிர்சாதன எந்திரம் (ஏ.சி), கணினி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story