கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது


கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது
x
தினத்தந்தி 6 April 2017 9:38 PM GMT (Updated: 2017-04-07T03:08:12+05:30)

இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பை வாபஸ் பெறக்கோரி கர்நாடக லாரி உரிமையாளர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பை வாபஸ் பெறக்கோரி கர்நாடக லாரி உரிமையாளர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

22 லட்சம் லாரிகள் ஓடவில்லை

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணம் உயர்வு போன்றவற்றை திரும்ப பெறக் கோரி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த மாதம்(மார்ச்) 30–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம், கர்நாடகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 22 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

இதன் காரணமாக உணவு பொருட்கள் உள்பட பல்வேறு வகையான சரக்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்து செல்ல முடியாமல் ஆங்காங்கே தேக்கம் அடைந்துள்ளன. சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு சரக்குகள் தேங்கியுள்ளன. நாளை(சனிக்கிழமை) முதல் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் குதிக்கிறது. இதனால் நாடு முழுவதும் லாரிகள் ஓடாத நிலை ஏற்படும்.

பெட்ரோல்–டீசல் டேங்கர் லாரிகள்

இந்த நிலையில் கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட லாரி உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா கலந்து கொண்டு பேசியதாவது:–

எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம். ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் பெட்ரோல்–டீசல், கியாஸ் டேங்கர் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கர்நாடகத்திலும் பெட்ரோல்–டீசல் டேங்கர் லாரிகள் நிறுத்தப்படும். தென்மாநிலங்களில் லாரிகள் ஓடாததால் மத்திய–மாநில அரசுகளுக்கு தினமும் ரூ.7,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் லாரி உரிமையாளர்களுக்கும் தினமும் ரூ.2,500 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

சுங்கச்சாவடிகளை அமைக்க...

நாம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாநில அரசு உறுதி அளித்துள்ளது. பழைய ரோடுகளுக்கு வர்ணம் பூசி 19 மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மாநில அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் சாலைகளை மறித்து நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். முதல்–மந்திரி சித்தராமையா இதுபற்றி விரைவாக ஒரு கூட்டத்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு சண்முகப்பா பேசினார்.


Next Story