ரே‌ஷன் கடை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சர்க்கரை, அரிசியில் ஈக்கள் மொய்ப்பதாக பொதுமக்கள் புகார்


ரே‌ஷன் கடை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சர்க்கரை, அரிசியில் ஈக்கள் மொய்ப்பதாக பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 6 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-07T03:59:58+05:30)

ரே‌ஷன் கடை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சர்க்கரை, அரிசியில் ஈக்கள் மொய்ப்பதால் அவதிப்படுவதாக கூறி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பூந்தமல்லி,

ரே‌ஷன் கடை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சர்க்கரை, அரிசியில் ஈக்கள் மொய்ப்பதால் அவதிப்படுவதாக கூறி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ரே‌ஷன் கடை அருகே குப்பை

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 15–வது வார்டு சூரிய நாராயணா நகர் பகுதியில் ரே‌ஷன் கடை இயங்கி வருகிறது. ஸ்ரீதேவி நகர், செல்வகணபதி நகர், அய்யப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு ரே‌ஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த கடைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகளில் மொய்க்கும் ஈக்கள் பறந்து வந்து அருகில் உள்ள ரே‌ஷன் கடையில் வைக்கப்பட்டு உள்ள சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் மீதும் மொய்க்கின்றன.

நகராட்சி அலுவலகம் முற்றுகை

இதனால் ரே‌ஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். இதை கண்டித்தும், ரே‌ஷன் கடை அருகே கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றக்கோரியும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் நேற்று திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:–

ரே‌ஷன் கடைக்கு அருகே உள்ள காலி இடத்தில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வைத்து உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடைக்கு வருபவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நோய் பரவும் அபாயம்

குப்பைகளில் மொய்க்கும் ஈக்கள் பறந்து வந்து ரே‌ஷன் கடையில் உள்ள சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் மீதும் மொய்க்கின்றன. அந்த சர்க்கரையை வாங்கி காபி, டீயில் போட்டு குடிக்கும் குழந்தைகள், பெரியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஈக்களின் தொல்லையால் கடை ஊழியர்களும், கடைக்கு வெளியே நின்றபடி பொருட்களை அளந்து போட வேண்டிய நிலை உள்ளது. குப்பைகளால் இரவு நேரங்களில் கொசுதொல்லையும் அதிகரித்து உள்ளது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குப்பைகள் அகற்றம்

இதையடுத்து குப்பைகளை உடனடியாக அகற்றுவதாக கூறி, முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை நகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்படி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனடியாக ரே‌ஷன் கடை அருகில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை டிராக்டர் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இனிமேலும் ரே‌ஷன் கடை அருகே குப்பைகளை கொட்டினால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story