பாளையங்கோட்டை நகைக்கடை கொள்ளையில் மீட்கப்பட்ட நகை– பணம் கோர்ட்டில் ஒப்படைப்பு


பாளையங்கோட்டை நகைக்கடை கொள்ளையில் மீட்கப்பட்ட நகை– பணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 7 April 2017 8:00 PM GMT (Updated: 2017-04-07T20:40:19+05:30)

பாளையங்கோட்டை நகைக்கடையில் கொள்ளையில் மீட்கப்பட்ட 37½ கிலோ தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 95 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை நகைக்கடையில் கொள்ளையில் மீட்கப்பட்ட 37½ கிலோ தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 95 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

நகைகள் கொள்ளை

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் (மார்ச்) 23–ந் தேதி இரவில் ஒரு கும்பல் நகைக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையே வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த காலிக் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்று விட்டனர். கொள்ளையர்கள் சென்ற காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர்.

நகைகள் பட்டியல்

மேலும் கொள்ளையர்கள் காரில் விட்டுச் சென்ற நகைகளை வேலூர் மாவட்ட போலீசார் கைப்பற்றி, பாளையங்கோட்டை போலீசார் வசம் ஒப்படைத்தனர். இந்த நகைகளை கோர்ட்டு மூலம் நகைக்கடை உரிமையாளரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையொட்டி கடந்த 4–ந்தேதி போலீசார் நகைகளை நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அப்போது நகைகளை ஒட்டுமொத்தமாக புகைப்படம் எடுத்து கொடுத்திருந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட் ராம்தாஸ் நகைகளை வகைப்படுத்தி, பட்டியலிட்டு, அவற்றை தனித்தனியாக புகைப்படம் எடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக போலீசார் கோர்ட்டு உத்தரவுப்படி நகைகளை பட்டியலிட்டு, தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்து தயார் படுத்தினர். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் நெல்லை மாநகர போலீஸ் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் வரதராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் நகை பெட்டிகளை பலத்த பாதுகாப்புடன் வேனில் நெல்லை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

கோட்டில் ஒப்படைப்பு

முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி ராம்தாஸ் முன்னிலையில் ஒப்படைத்தநர். 37½ கிலோ நகை, ரூ.7 லட்சத்து 95 ஆயிரம் பணம் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது. இதுதவிர கொள்ளையர்கள் நகைக்கடையில் துளை போட்டு திருடுவதற்கு பயன்படுத்திய வெல்டிங் வைக்க பயன்படும் 3 கியாஸ் சிலிண்டர்கள், இரும்பு கம்பியை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை, ஏணி போன்றவற்றையும் கோர்ட்டில் ஒப்படைத்தனர். நகைகளின் பட்டியல் மற்றும் அவற்றின் தனித்தனி புகைப்படங்களும் கோர்ட்டில் வழங்கப்பட்டன.

இதையடுத்து மாஜிஸ்திரேட் ராம்தாஸ் சரிபார்த்து ஏற்றுக் கொண்டார். இந்த நகைகள் விரைவில் நகைக்கடை அதிபர் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story