டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-10T00:36:58+05:30)

தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம்

கோர்ட்டு உத்தரவுபடி தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து பொள்ளாச்சி ரோட்டில் 500 மீட்டருக்கு அடுத்துள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று அம்மாபட்டி பிரிவிலிருந்து கொட்டாப்புளிபாளையம் செல்லும் வழியில், புதிதாக டாஸ்மாக் கடை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது “இந்த பகுதியில் டாஸ்மாக் கடைக்கு யாரும் கட்டிடத்தை வாடகைக்கு கொடுப்பதில்லை. இதனால் குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில், புதிதாக கட்டிடம் கட்டி பாருடன் சேர்ந்த டாஸ்மாக் கடை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

இதற்காக அந்த இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பகுதியில் அம்மாபட்டி மற்றும் பஞ்சப்பட்டி ஆகிய கிராமங்களில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்படும். மேலும் இந்த பகுதியில் பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் காடுகளில் தனியாக ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருப்பார்கள்.இவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது. எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தை நடத்தினோம்“ என்று கூறினர்.

இது பற்றிய தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டதுறைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story