ரூ.1½ லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு பெண் கைது


ரூ.1½ லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு பெண் கைது
x
தினத்தந்தி 10 April 2017 9:38 PM GMT (Updated: 10 April 2017 9:38 PM GMT)

சிவமொக்கா டவுனில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் உறவினர் போல் நடித்த பெண் ஒருவர், ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றார்.

சிவமொக்கா,

சிவமொக்கா டவுனில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் உறவினர் போல் நடித்த பெண் ஒருவர், ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உறவினர் போல் நடித்து...

சிவமெக்கா டவுனில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் ஒன்று நடந்தது. இந்த திருமணத்திற்கு வந்த பெண் ஒருவர் தான் பெண் வீட்டாரின் உறவினர் என்று கூறி அங்கிருந்தவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும் அங்கிருந்த பெண் வீட்டாரிடம் நெருங்கி பழகினார். திருமண நிகழ்ச்சி என்பதால் அங்கிருந்தவர்களுக்கு அப்பெண் மீது சந்தேகம் ஏற்படவில்லை.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் மணமகளின் உறவினர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றார். மேலும் அங்கிருந்தவர்களிடம் தான் உடை மாற்றிவிட்டு வருவதாக கூறி உள்ளார். அதை உண்மை என்று நம்பிய பெண் வீட்டார் மணமகளை அழைத்து கொண்டு மணமேடைக்கு வந்தனர்.

நகைகள், பணம் திருட்டு

இதையடுத்து அந்த பெண் அந்த அறையில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு மண்டபத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு வந்த மணப்பெண் வீட்டார் அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கிருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றையும் காணாததால் பதற்றம் அடைந்தனர். யாரோ ஒருவர் நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பெண் வீட்டார் கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருமணத்திற்கு வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பெண் கைது

மேலும் திருமண மண்டபத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மணப்பெண்ணின் உறவினர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு ஒரு பெண் வெளியே செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. மேலும் அந்த பெண் சிவமொக்கா டவுன் லஷ்கர் மொகல்லா பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் ரேவதியை கைது செய்தனர். மேலும் அவர் திருடிச் சென்ற ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர். தொடர்ந்து ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story