அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்கிரமிப்பு நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்


அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்கிரமிப்பு நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 April 2017 10:07 PM GMT (Updated: 2017-04-11T03:37:02+05:30)

அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

மும்பை,

மும்பை அந்தேரி, வெர்சோவா பகுதியில் உள்ள பத்ரிநாத் அடுக்குமாடி குடியிருப்பின் 20-வது தளத்தில் இந்தி நடிகை அனுஷ்கா சர்மா குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு உள்ள பொதுவழிப் பாதையை ஆக்கிரமித்து மின் இணைப்பு பெட்டியை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து மும்பை மாநகராட்சியிடம் குடியிருப்புவாசி ஒருவர் புகார் செய்தார். இதன்பேரில், மாநகராட்சி மேற்கொண்ட விசாரணையில், அனுஷ்கா சர்மா விதிமுறைகளை மீறி மின் இணைப்பு பெட்டி வைத்தது உறுதியானது.

மாநகராட்சி நோட்டீஸ்

எனவே அதனை உடனடியாக அகற்றுமாறு, நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மாநகராட்சி ‘கே’ வார்டு உதவி பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தவறும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதனிடையே, தன் மீதான இந்த ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை அனுஷ்கா சர்மா திட்டவட்டமாக மறுத்தார். இதுபற்றி அவரது செய்தித்தொடர்பாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனுஷ்கா சர்மா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோத கட்டுமானமோ அல்லது எதுவும் நிறுவப்படவில்லை. 20-வது தளத்தில் 3 வீடுகளை அவர் சொந்தமாக வாங்கியிருக்கிறார். இதற்கான ஒப்புதல்கள் அனைத்தும் கடந்த 2013-ம் ஆண்டிலேயே பெறப்பட்டு விட்டது. அனுஷ்கா சர்மாவும், அவரது குடும்பத்தினரும் சட்டத்தை மதிப்பவர்கள். பொறுப்புமிக்க குடிமக்கள். பிறருக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

இவ்வாறு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

28 வயதான நடிகை அனுஷ்கா சர்மா, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும், அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story