மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி பெற்று மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க வேண்டும் கலெக்டர் மலர்விழி பேச்சு


மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி பெற்று மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க வேண்டும் கலெக்டர் மலர்விழி பேச்சு
x
தினத்தந்தி 14 April 2017 4:45 AM IST (Updated: 13 April 2017 6:55 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி பெற்று மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வேண்டும்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார். சிவகங்கை அருகே உள்ள காட்டு நெடுங்குளம் ஊராட்சியில் பிற மாவட்டங்களை சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சியையும், பின்னர் சுயஉதவி குழுக்களுக்கான தனிநபர் இல்ல கழிப்பறை திட்ட பயிற்சியையும் அவர் ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்ற கூட்டங்களில் கலெக்டர் மலர்விழி கூறியதாவது:–

“உடல் ஊனம் வாழ்வில் முன்னேற தடையாக அமையாது“, “மன ஊனம் தான் வாழ்வில் முன்னேற தடையாக இருக்கும்“. மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னம்பிக்கையுடன் படித்து இந்திய ஆட்சி பணிக்கு தேர்வாகி உள்ளார். முயற்சி செய்தால் எதையும் தன்வசப்படுத்தலாம். இங்கு பயிற்சி முடித்த அனைவரும் மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்ற சுயஉதவி குழு பயிற்றுனர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு

கட்டப்பட்ட கழிப்பறைகளை பயன்படுத்த விழிப்புணர்வு அளிப்பது, முறையாக கழிப்பறை கட்டுவது, ஊராட்சியினை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு அளிப்பது, திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு வழங்குவது, குழந்தைகள் கைகளை தூய்மையாக வைத்து பராமரிப்பது என அனைத்து சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை சுயஉதவிக்குழு பயிற்றுனர்கள் அளிக்க வேண்டும். கிராமங்களில் மேற்கண்ட பணிகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து திருப்புவனம் வட்டார ஊராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளால் தொடங்கப்பட்டுள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் சேவை மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். அவர்களது செயல்பாடுகள், வருவாய் வாய்ப்புகள் குறித்து கலெக்டர் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட மேலாளர் அசோக்குமார், உதவித்திட்ட மேலாளர்கள் கலைவாணி, பாலமுருகன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story