காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 17–வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 17–வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 14 April 2017 4:30 AM IST (Updated: 13 April 2017 11:32 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 17–வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.

தஞ்சாவூர்,


காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடை செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கடந்த மாதம் 28–ந் தேதி முதல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 17–வது நாளாகவும் நீடித்தது.

விவசாயிகள் பங்கேற்பு

போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மாகாந்தி, வேதாரண்யத்தில் உப்புசத்தியாகிரக போராட்டம் நடத்தியதை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்ட உப்புசத்தியாகிரக தண்டியாத்திரை நினைவு கமிட்டியினர், பொதுச்செயலாளர் சக்திசெல்வகணபதி தலைமையில் துணைத்தலைவர் சண்முகவடிவேல், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கணேசன், துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதே போல் மத்திய திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் மதியழகனும் போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

முதல்கட்ட வெற்றி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய மந்திரி உமாபாரதி கொண்டு வந்த ஒற்றை தீர்ப்பாய மசோதா குறித்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு, விவாதம் நடத்தாமலேயே கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமே ஒற்றை தீர்ப்பாய மசோதாவை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தான். எங்களின் போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால் ஒற்றை தீர்ப்பாய மசோதா நிறைவேறி இருக்கும். ஒற்றை தீர்ப்பாய மசோதா நிறைவேறாமலேயே கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது எங்களின் போராட்டத்துக்கு கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி ஆகும். இந்த போராட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த போராட்டத்தை மேலும் விரிவு படுத்த நாளை (சனிக்கிழமை) அனைத்து விவசாயிகளையும் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். எங்கள் கோரிக்கை வெற்றி அடைந்தால் தான் போராட்டம் முடிவுக்கு வரும். வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் எங்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளை தெரிவித்தோம். அவர்கள் முதல்–அமைச்சரிடம் கூறுவதாக தெரிவித்தனர். ஓரிரு நாளில் இது தொடர்பான அறிவிப்புகள் முதல்–அமைச்சரிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு எங்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகிறது. எனவே மத்திய அரசு புரிந்து கொள்ளும் வகையில் எங்கள் போராட்டத்தை மக்கள் திரள் போராட்டமாக நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story