காட்பாடி பிரம்மபுரத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு மோப்பநாய் மூலம் சோதனை


காட்பாடி பிரம்மபுரத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு மோப்பநாய் மூலம் சோதனை
x
தினத்தந்தி 15 April 2017 4:45 AM IST (Updated: 14 April 2017 8:59 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி பிரம்மபுரத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் புதிய பள்ளி கட்டிடம் 2–வது மாடிவரை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் முன்பகுதியில் போர்டிகோ கட்டும் பணியின் போது(கான்கிரீட் போட்ட போது) நேற்று முன்தினம் மாலை திடீரென போர்டிகோ பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த 13 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி ரவிச்சந்திரன் என்ற பாக்கியராஜ் (45) சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 பேர் மீது வழக்குப்பதிவு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கலெக்டர் ராமன், டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் அதிகாரிகள், டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். இடிபாடுகளுக்குள் வேறுயாரும் சிக்கவில்லை என்பதை அறிந்தபிறகு மாலை 6.30 மணிக்கு மீட்புபணி நிறுத்தப்பட்டது.

அமைச்சர் நிலோபர்கபிலும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கட்டிட தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி விசாரணை நடத்தி பள்ளியின் நிர்வாகி பாலமுரளி கிருஷ்ணன், காண்டிராக்டர் நித்தியகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு

இந்த நிலையில், பள்ளி கட்டிட விபத்து நடந்த இடத்தை தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலை பார்வையிட்டு சென்றார். அதன் பின்பு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்ய சென்னையில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் கட்டிடம் இடிந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மோப்பநாய் லியோ மூலம் கட்டிட இடிபாடுகளில் யாராவது புதைந்துள்ளனரா? என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. யாரும் இல்லை என தெரிந்த பிறகு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

மேலும் ஏற்கனவே கட்டியுள்ள கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து என்ஜீனியர்கள் ஆய்வு செய்வார்கள் என்று அமைச்சர் நிலோபர்கபில் தெரிவித்து இருந்தார். அந்த ஆய்வு குழுவினர் இன்று அல்லது நாளை வந்து ஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிடப்பணி நிறுத்தம்

2 மாடி கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யும் வரை கட்டிட பணிகள் நிறுத்தப்படும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்து இருந்தார். அதன்படி கட்டிடப்பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.


Next Story