திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
திருவண்ணாமலை,
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த 3–ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ‘ஈஸ்டர்’ பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ‘ஈஸ்டர்’ திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத் தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை ‘வியாகுல’ வியாழன் அல்லது பெரிய வியாழன் என்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, பெரிய வியாழக்கிழமையான நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கும் நடந்தது. திருப்பலிக்கு பிறகு நற்கருணை இடமாற்ற பவனியும், ஆராதனையும் நடந்தது.
புனிதவெள்ளிஅதனை தொடர்ந்து நேற்று புனிதவெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும்போதும், அதில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று ‘பைபிளில்’ கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனை நடந்தது.
திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் உள்ள உலகமாதா தேவாலயத்தில் நேற்று காலை 7 மணிக்கு சிலுவை பாதை வழிபாடு நடந்தது. கிரேஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கு தந்தை ஞானஜோதி தலைமையில் சிலுவையை சுமந்தபடி சென்று, 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள். கடைசியில் சிலுவை பாதை உலக மாதா தேவாலயத்தை வந்தடைந்தது. அங்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை ஆற்காடு லுத்தரன் தேவாலயத்தில் ஆயர் குருநாதன் தலைமையில் சிறப்பு பிரார்தனையும், ஆராதனையும் நடந்தது. திருவண்ணாமலை சாரோனில் உள்ள தேவாலயத்திலும், தேனிமலையில் உள்ள ஏசு தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.
‘ஈஸ்டர்’ பெருவிழாஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3–ம் நாளான ஞாயிற்றுக்கிழமை ‘ஈஸ்டர்’ பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து, விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ‘ஈஸ்டர்’ பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.