சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்கக்கூடாது மாவட்ட நிர்வாகத்துக்கு பா.ம.க. கோரிக்கை


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி  மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்கக்கூடாது மாவட்ட நிர்வாகத்துக்கு பா.ம.க. கோரிக்கை
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 14 April 2017 10:11 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் திறக்கக்கூடாது

சிவகாசி,

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் சிவகாசி திலகபாமா மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 31–ந்தேதி அன்று தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அடைத்தனர்.

மீண்டும் திறப்பு

அதன் படி விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வந்த 90 மதுக்கடைகளும், தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த 20 மதுகடைகளும் மூடப்பட்டன. இதில் தொழிலாளர்கள் அதிகம் வாழும் சிவகாசி பகுதியில் மட்டும் சுமார் 20 மது கடைகள் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டன. இதற்கு பெண்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதில், பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். இதற்கு பல இடங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை போராட்டங்கள் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.

வலியுறுத்தல்

தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் எடுத்து கூறியும், அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்யும் நிலை உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதியில் மதுக்கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story