தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 15 April 2017 5:00 AM IST (Updated: 14 April 2017 10:49 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கடலூர் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கடலூர்,

தமிழ் ஆண்டான துன்முகி நேற்று முன்தினம் முடிவடைந்ததை அடுத்து புத்தாண்டு ஹேவிளம்பி நேற்று பிறந்தது. இதை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜையும், அதைத் தொடர்ந்து பள்ளியறை பூஜையும் நடைபெற்றது. பின்னர் பள்ளியறை அம்மன் பெரியநாயகி சன்னதிக்கு எழுந்தருளினார்.

காலை 6 மணிக்கு பெரியநாயகி, பாடலீஸ்வருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முருகன், கெஜலட்சுமி, நவகிரகம், பிடாரி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், துர்க்கை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் காலை 9 மணிக்கு காலசந்தி பூஜை, தீபாராதனை நடைபெற்று பகல் 12 மணிக்கு உச்சிகாலபூஜை நடைபெற்று பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தங்ககவசம் அணிவித்து தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு பாடலீஸ்வரருக்கு தங்ககவசமும், பெரியநாயகி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பிரதோ‌ஷநாயகர் கோவிலை 3 முறை வலம் வந்தார். தொடர்ந்து புது வருட பஞ்சாங்கம் வாசித்து, பஞ்சாங்கத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் தொடர்ந்து பள்ளியறை பூஜை, பைரவருக்கும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேவநாதசுவாமி கோவில்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஷ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதை தொடர்ந்து உற்சவர் தேவநாதசுவாமி செங்கமலதாயார் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு மகா அபிஷேகம் நடைபெற்று, சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலையில் உள் புறப்பாடு நடந்தது. இதில் தேவநாதசுவாமி, செங்கலதாயார் உள்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜபெருமாள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு திருப்பாவை சாற்று முறை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், 11 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7.30 மணிக்கு சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநவமி விழாவையொட்டி இன்று(சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ராமர் பட்டாபிஷேகமும், அதை தொடர்ந்து வீதி உலா புறப்பாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, தக்கார் கோவிந்தசாமி, தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

வீர ஆஞ்சநேயர்

திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 10 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமானது. 11.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு லட்சதீபம் ஏற்றுதல், 7 மணிக்கு ஊஞ்சல் சேவை, 8 மணிக்கு திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தக்கார் முத்துலட்சுமி, கணக்கர் முத்து ஆகியோர் செய்து இருந்தனர்.

அதேபோல் வில்ராயநத்தம் வில்வநாதீஸ்வரர், கம்மியம்பேட்டை விஸ்வநாதீஸ்வரர் கோவில், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜபெருமாள் கோவில், புதுப்பாளையம் ராஜகோபால் சாமி கோவில், செம்மண்டலம் சாந்தஆஞ்சநேயர் கோவில், வண்டிப்பாளையம் சாலை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பாளையம் தரைக்காத்த காளியம்மன்கோவில், புதுவண்டிப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் வரசக்தி விநாயகர் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி விநாயகருக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் உள்ள அய்யப்பன் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்


Next Story