தமிழ் புத்தாண்டையொட்டி கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டையொட்டி கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உளுந்தாண்டார் கோவில் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நாடு நலம் பெறவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீரட்டானேஸ்வரர் கோவில்திருக்கோவிலூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஜீயர் சுவாமி முன்னிலையில் தமிழ் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரகண்டநல்லூர் அதுல்யநாததேஸ்வரர் கோவில், பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சந்தப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, வடமாலை, துளசி மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மணலூர்பேட்டை, வடக்கு நெமிலி, மேட்டுக்குப்பம் மற்றும் திருக்கோவிலூர் பகுதியை சுற்றியுள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மாலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், சின்னசேலம் அருகே நல்லாத்தூர் புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மணிநதிக்கரையில் உள்ள அலமேலு மங்கா சமே வெங்கடேச பெருமாள் கோவில், சங்கராபுரம் முருகன் கோவில், குந்தவேல் முருகன் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தியாகதுருகத்தில் உள்ள சீனுவாசபெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.