கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சிமுனை


கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சிமுனை
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 15 April 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சிமுனையில் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் கோடநாடு காட்சிமுனையும் ஒன்றாகும். கோத்தகிரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த காட்சிமுனைக்கு செல்லும் சாலையோரங்களில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்கள் பச்சை கம்பளத்தை விரித்ததுபோல் இருக்கும்.

கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சிமுனையில் இருந்து சமவெளி பகுதிகளையும், ரங்கசாமி மலை, தெங்குமரஹாமா பகுதி, பவானிசாகர் அணை ஆகியவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

இந்த பகுதியில் நிலவும் குளிர்ந்த இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வந்து செல்கிறார்கள். இங்கு கோத்தகிரி வடக்கு வனக்கோட்ட வனத்துறையால் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக டெலஸ்கோப் அறை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது பயணிகள் காத்திருக்கும் அறை, பழங்குடியின மக்களின் தயாரிப்புக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

சுற்றுலா பயணிகள் வருகை

பழங்குடியின மக்களின் பாரம்பரிய பொருட்கள் மற்றும் வாசனை பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடநாடு காட்சிமுனைக்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசிக்க நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. மேலும் டெலஸ்கோப் மூலம் பார்க்க நபர் ஒருவருக்கு 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே நேற்று விடுமுறை என்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

இதுகுறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:–

கோடநாடு காட்சிமுனைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இயற்கையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் செலவில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு காடுகள் வளர்ப்பின் அவசியம், வனவிலங்குகள், பறவைகள் குறித்த அரிய புகைப்படங்கள் இடம்பெற்று இடுடுக்கும். அருங்காட்சியகம் அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும். இந்த அருங்காட்சியம் பழங்குடியின மகளிர் சுயஉதவி குழுவின் பராமரிப்பில் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story