வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த காட்டெருமை: வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த காட்டெருமை 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
கொலக்கம்பை,
குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு காட்டெருமை விழுந்தது. 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
காட்டெருமைகள்நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சிம்ஸ் பூங்கா பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து குன்னூர் வனத்துறையினர் சிம்ஸ் பூங்கா பகுதியில் இரவு பகலாக காட்டெருமைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அந்த பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டெருமைகள் அங்கிருந்து செல்ல மறுத்து, தொடர்ந்து அந்த பகுதியிலேயே முகாமிட்டு அவ்வப்போது குடியிருப்பு, மற்றும் குன்னூர், கோத்தகிரி சாலைகளில் வலம் வருவது வாடிக்கையாக உள்ளது.
கூரையை உடைத்துக்கொண்டு விழுந்ததுஇந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று சிம்ஸ் பூங்கா அருகே உள்ள குடியிருப்புக்குள் உணவு தேடி சென்றது. அப்போது தேவராஜ் என்வரது வீட்டின் மேல் பகுதியில் சென்ற காட்டெருமை திடீரென கால் தவறி வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு வீட்டினுள் விழுந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மயக்க ஊசிஇது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், வீட்டுக்குள் சிக்கிய காட்டெருமையை வெளியே துரத்தும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடியும் அந்த காட்டெருமையை துரத்த முடியவில்லை.
சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அதிகாரி கலாநிதி தலைமையில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி, கட்டபெட்டு வனச்சரகர் சிவா, குன்னூர் வனவர் சவுந்திரராஜன், வனகாப்பாளர்கள் விக்ரமன், பாபு, மணிகண்டன், மோகன்ராஜ், ஆனந்தன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி மீட்க முடிவு செய்தனர்.
விரட்டியடிப்புஇதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் விஜயராகவன் வரவழைக்கப்பட்டு காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் மயக்கம் அடையாத அந்த காட்டெருமை வீட்டின் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி குடியிருப்புகளுக்குள் அங்கும், இங்குமாக ஓடியது. பின்னர் பெட்போர்டு சிம்ஸ் பூங்கா சாலையில் வாகனங்களுக்கு இடையே ஓடத்தொடங்கியது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அலறியடித்தவாறு ஓடினர்.
தொடர்ந்து அந்த காட்டெருமை ஒரு புதர் பகுதியில் பதுங்கிக்கொண்டது. இதனால் அதன் மீது வனத்துறையினர் தண்ணீரை ஊற்றினர். இந்த நிலையில் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு அதாவது மதியம் 2.30 மணிக்கு அந்த காட்டெருமை சிம்ஸ் பூங்கா அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டது.
சாலைகளில் சென்ற காட்டெருமையால் விபத்து ஏற்படாமல் தடுக்க குன்னூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், மற்றும் மேல் குன்னூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.