கும்பகோணத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்
கும்பகோணத்தில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது.
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சகாஜி நாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மகன் விக்ரம் (வயது28). இவர் பாலக்கரை அருகே இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை சந்திரசேகரன் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை விக்ரம் தனது நண்பர்கள் பாரதிதாசன்(28), செல்வகணபதி(26) ஆகியோருடன் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் கோதண்டபாணி தெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் விகரமை வழிமறித்தனர். திடீரென அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் விக்ரமை சரமாரியாக வெட்டியது. அதை தடுக்க முயன்ற அவரது நண்பர்களையும் அந்த கும்பல் வெட்டியது. விக்ரமிற்கு முகம், மா£பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலை நடந்த பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.
தனிப்படை அமைப்புஇதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயம் அடைந்த விக்ரமின் நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விக்ரமை கோதண்டபாணி தெரு பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.