தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழ்ப்பல்கலைக்கழக நூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை துணைவேந்தர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
தமிழ்ப்பல்கலைக்கழக நூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனையை துணைவேந்தர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை தஞ்சை கீழராஜவீதியில் உள்ள அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் இப்பதிப்புத்துறையின் நூல்கள் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தள்ளுபடி விற்பனை நேற்று தொடங்கியது. இதை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழின் பன்முக கூறுகளை ஆழமாக ஆராய்வதும், ஆவணப்படுத்துவதும், பதிவு செய்வதும் என பல நிலைகளில் தமிழ்மொழி, கலை, பண்பாட்டை தமிழ் மக்களிடையே எடுத்து செல்வதில் தமிழ்ப்பல்கலைக்கழகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமின்றி தமிழ் உலகின் தலைச் சிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகளும், பழந்தமிழ் இலக்கியங்களும், அகராதி மற்றும் களஞ்சியங்களும் என பலவகை நூல்களையும் ஆழமாக பதிவு செய்து அவற்றை நூலாக வெளியிடும் அரும்பணியை பதிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது.
சித்திரை திருவிழாஇதுவரை 426 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அரிய பணியை செய்ய இடர்பாடு இருக்கிறது. பதிப்புத்துறை தேவையா? என அரசு அதிகாரிகள் கேள்வி கேட்கின்றனர். புதிய பதிப்புகளும், மறுபதிப்புகளும் செய்வதற்கு நிதியை பெறுவதில் சிரமம் உள்ளது. நல்ல ஆய்வு நூல்களை தர வேண்டும் என்ற கடமை உள்ளது. பொதுமக்கள் மலிவு விலையில் அரிய நூல்களை வாங்கி பயன்பெறும் வகையில் 50 சதவீத தள்ளுபடியில் நூல்கள் விற்பனை மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு தள்ளுபடி விலையில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் விற்பனை செய்யப்பட்டன.
வருகிற 21–ந் தேதி சித்திரை திருவிழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. அன்றைக்கு 3 புதிய நூல்கள் வெளியிடப்படும். த, நா வடிவிலான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் முதல் பதிப்புத்துறையானது பல்கலைக்கழகத்தில் இயங்கும். நூல்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக நூல்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை வெளியிட்ட நூல்கள் இருக்க வேண்டும் என்ற அரசாணை வரக்கூடிய நல்ல சூழல் உள்ளது. இந்த விற்பனை வருகிற 28–ந் தேதி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பதிவாளர் முத்துக்குமார், பதிப்புத்துறை இயக்குனர் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.