வேடசந்தூரில் மதுபானக்கடைகள் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டம்


வேடசந்தூரில் மதுபானக்கடைகள் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் மதுபானக்கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர்

வேடசந்தூரில் பழனிரோடு, கரூர்ரோடு, குங்குமக்காளியம்மன்கோவில்தெரு உள்பட 4 இடங்களில் அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வந்தன. நெடுஞ்சாலையோரத்தில் அமைந்திருந்த இந்த 4 மதுபானக்கடைகள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டன. இதையடுத்து பழனிரோடு மற்றும் குங்குமக்காளியம்மன்கோவில் தெருவில் இருந்த மதுபானக்கடைகளை கோவிலூர் ரோட்டில் கோகுல்நகரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதிகளில் மதுபானக்கடை அமைத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்த வழியாகத்தான் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

தாசில்தாரிடம் மனு

இங்கு மதுபானக்கடைகள் அமைக்கப்பட்டால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்று கூறி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே அங்கு மதுபானக்கடைகள் அமைக்கக்கூடாது என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கோ‌ஷமிட்ட அவர்கள், பின்னர் ஊர்வலமாக சென்று தாசில்தார் தசாவதாரனிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.


Next Story