மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்


மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து  கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 4:45 AM IST (Updated: 15 April 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

கோவை சின்னியம்பாளையத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள 158 டாஸ்மாக் மதுக்கடைகள் அகற்றப்பட்டன. அந்த கடைகளை வேறு இடங்களில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பஸ்நிலையத்தில் உள்ள மதுக்கடை அகற்றப்பட்டது. அதை சின்னியம்பாளையம் ஊருக்குள் மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. அதற்காக கடையும் கட்டி முடிக்கப்பட்டது. ஊருக்குள் மதுக்கடை அமைக்க அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தனர்.

கருப்புக்கொடி கட்டி போராட்டம்

இதற்கிடையே ஓரிரு நாட்களில் அந்த கடையை திறக்க உள்ளதாக அந்தப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகள் மற்றும் அங்குள்ள கடைகளில் கருப்புக்கொடியை கட்டினர். மேலும் அந்த மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய விளம்பர பேனரையும் வைத்தனர். அத்துடன் அந்த கடை கட்டப்பட்டு இருக்கும் இடத்தின் எதிரே உள்ள தோட்டத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உங்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும், எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.எஸ்.பாலு கூறியதாவது:–

பாதுகாப்பு இருக்காது

அவினாசி ரோடு சின்னியம்பாளையத்தில் இருந்து திருச்சி ரோட்டிற்கு செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க உள்ளனர். கடை திறக்க உள்ள இடத்தை சுற்றிலும் விவசாய விளைநிலங்கள் உள்ளன. இங்கு அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு மதுக்கடையை திறந்தால், கடைக்கு வரும் மதுபான பிரியர்கள், மதுபானங்களை வாங்கி தோட்டத்துக்குள் வந்து குடிக்க வாய்ப்பு உள்ளது.

அத்துடன் இந்தப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு மத்தியில் டாஸ்மாக் மதுக் கடையை திறந்தால், இங்கு குடியிருந்து வருபவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவேதான் நாங்கள் இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று போராடி வருகிறோம். இந்த கடையை இங்கு திறக்கக்கூடாது. அதை திறக்க நடவடிக்கை எடுத்தால் எங்கள் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story