திருப்பூர் மாவட்டத்தில் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்
திருப்பூர் மாவட்டத்தில் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் கலெக்டர் எஸ்.ஜெயந்தி வேண்டுகோள்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி வேண்டுகோள் விடுத்தார்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழாஅம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் பணமில்லா பரிவர்த்தனை (டிஜிதன் மேளா) தொடங்கி 100–வது நாள் நிறைவு விழா நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சிகள் மின்னணு திரையின் மூலமாக திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை கலெக்டர் எஸ்.ஜெயந்தி மற்றும் வங்கி அதிகாரிகள் பார்வையிட்டனர். இதில் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி பேசியதாவது:–
கிராமங்கள் வளர்ச்சி பெறும்போது தான் நாடு வளர்ச்சி அடையும். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பணமில்லா பரிவர்த்தனை முறையை நன்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக திருட்டுபோவது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். பொருட்களை வாங்குவதற்கு ஏ.டி.எம். கார்டு இருந்தால் போதும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
சிறப்பு பரிசுகள்‘பீம் ஆதார்’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள சிறு, சிறு பெட்டிக்கடைகளிலும் பொருட்களை வாங்கி விட்டு பணமில்லா பரிவர்த்தனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களில் பெரும்பாலானவர்கள் இன்று ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் கிராமங்களில் உள்ள சிறு வணிகர்களிடமும் இந்த திட்டத்தை எடுத்துக்கூறி பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும். இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில், இதுவரை பணமில்லா பரிவர்த்தனையை முழுமையாக அறிந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய 15 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கலெக்டர் பாராட்டினார். நிகழ்ச்சியில் கனரா வங்கியின் திருப்பூர் மண்டல துணை பொது மேலாளர் சசிதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீராம், நிதிசார் கல்வி ஆலோசகர் விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராதா, தேசிய தகவல் மைய அலுவலர் கண்ணன், மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.