டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தும் முறை அதிர்ச்சி அளிக்கிறது
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தும் முறை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சந்தேகமாக இருக்கிறதுதமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை நான் 5 முறை நேரில் சென்று சந்தித்தேன். தமிழக விவசாயிகளின் நலனுக்கான எல்லா திட்டங்களையும் கொண்டு வருவேன் என்று கூறினேன்.
மேலும் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணுவை, விவசாயத்துறை மந்திரியை 2 முறையும், நிதி மந்திரி அருண் ஜெட்லியை 3 முறையும் சந்திக்க வைத்தேன். அவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உமாபாரதி ஆகியோரையும் சந்தித்தனர். ஆனால் ஏன் இந்த போராட்டத்தை டெல்லியில் நடத்துகிறார்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வந்தபோது போராட்டக்காரர்களில் ஒருவர் நிர்வாணமாகி ரோட்டில் உருண்டார். அதற்கு பிறகு சில விவசாயிகளும் நிர்வாணமாக உருண்டனர். முதலில் நிர்வாணமாகியவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். அதை ஏன் அய்யாக்கண்ணு தடுக்கவில்லை. அதன் பின்னணி என்ன?.
அதிர்ச்சிபோராட்டத்தில் தமிழக பெண்களையும் நிர்வாணமாக்க திட்டம் இருப்பதாக போராட்டக்காரர்கள் சொன்னார்கள். பின்னர் அது தடுக்கப்பட்டது. அதன் பிறகு கழுத்தறுப்பு போராட்டத்துக்கு திட்டம். கழுத்தறுப்பு போராட்டம் என்றால் தூங்கும்போது அவர்களில் ஒருவரே மற்றொருவரின் கழுத்தை அறுப்பது என்று சொன்னார்கள். இதை நான் கேட்டபோது அய்யாக்கண்ணு மறுத்தார்.
வயலில் விவசாயிகள் கோவணம் கட்டி வேலை செய்தாலும், வெளியே வந்ததும் தொடை தெரியும்படி வேட்டி கட்ட மாட்டார்கள். ஆனால் தற்போதைய செயல் அதிர்ச்சியளிக்கும் படியாக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அந்த மாநில அரசே விவசாய கடனை தள்ளுபடி செய்தது. அதற்கு மத்திய அரசு பணம் தரவில்லை. ஏன் தமிழகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை?. எந்த ஒரு மாநில முதல்–அமைச்சரும் போராட்ட களத்தில் யாரையும் சென்று சந்தித்தது இல்லை. நேரு உள்ளிட்ட பிரதமர்களும் அதுபோன்று சந்திக்கவில்லை. போராட்டத்தை கைவிட்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அய்யாக்கண்ணுவிடம் கூறினேன். ஆனால் பிரதமரே வந்தாலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், என்று கூறி அவர் மறுத்துவிட்டார்.
ஆட்சி அமைக்கும்அண்ணா மற்றும் கருணாநிதியால் தமிழகத்தில் கால் ஊன்றிய தி.மு.க. தற்போது அழிந்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா விரைவில் ஆட்சி அமைக்கும். இங்கு, தலைமை இல்லாத ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது முக்கிய ஆவணங்களை சிலர் எடுத்துச் சென்று கூட்டத்தில் வீசினார்கள். அதில் சில ஆவணங்கள் கிடைத்ததா? என்று தெரியவில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.