புது வாழ்வு–மகளிர் திட்டங்களின் பெயர்களை பயன்படுத்தி பண மோசடி
பெரம்பலூர் மாவட்டத்தில் புது வாழ்வு–மகளிர் திட்டங்களின் பெயர்களை பயன்படுத்தி பண மோசடி புகார் தெரிவிக்க கலெக்டர் வேண்டுகோள்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புது வாழ்வுத்திட்டம் மற்றும் மகளிர்திட்டத்தின் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வரப்பெற்றுள்ளது. இவர்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும் இவர்கள் தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக்களை சந்தித்து கல்வி, வாகனம், வீடுகட்ட, நிலம் வாங்க மற்றும் தொழில்கடன் போன்றவற்றிற்கு குறைந்த அளவு வட்டியில் கடன் பெற்று தருகிறோம் என தெரிவித்து, அதற்கு ஆய்வு கட்டணமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வரை வசூலித்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிய வந்திருக்கிறது.
எனவே பொதுமக்கள் மோசடி நபர்களின் வலையில் சிக்காமல் இருக்க விழிப்போடு இருக்க வேண்டும். இது போன்ற பண மோசடியில் ஈடுபடுவோர் குறித்து புகார் அளிப்பதற்கு ஏதுவாக ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரப்பகுதிகளை சேர்ந்தவர்கள் புதுவாழ்வுத்திட்ட அலுவலகத்தை 04328–225133 என்ற எண்ணிலும், பெரம்பலூர் வட்டாரப்பகுதிகளை சேர்ந்தவர்கள் மகளிர் திட்ட அலுவலகத்தை 04328–225362 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பண மோசடிகளில் ஈடுபடுவோர் குறித்து தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.