மீனவ கிராமத்தில் அமைதியை சீர்குலைக்க முயன்ற 2 பேர் கைது


மீனவ கிராமத்தில் அமைதியை சீர்குலைக்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2017 4:45 AM IST (Updated: 15 April 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கோஷ்டி மோதல் ஏற்பட்ட மீனவ கிராமத்தில் அமைதியை சீர்குலைக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது வல்லம்பேடு குப்பம் என்ற மீனவ கிராமம். இங்கு எல்லப்பன்(வயது 52) மற்றும் சத்திரத்தான்(55) ஆகிய 2 பேர் தலைமையில் இரு கோஷ்டி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20–ந்தேதி இரவு எல்லப்பன் ஆதரவாளர்களை சத்திரத்தான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பட்டாக் கத்தியால் வெட்டியதில் எல்லப்பன் ஆதரவாளர்கள் அண்ணாதுரை(45) குணசேகரன்(60) ஆகியோர் உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் சத்திரத்தான் மற்றும் அவருடைய கோஷ்டியை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை

மீனவ கிராமத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அவ்வப்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதேபோல் கடந்த 11–ந்தேதியும் பொன்னேரி கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அதிகாரிகளின் அனுமதி இன்றி சத்திரத்தான் ஆதரவாளர்கள் யாரும் வல்லம்பேடு குப்பம் கிராமத்திற்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் சத்திரத்தான் ஆதரவாளர்களான சரவணன்(40), விக்னேஷ்(33) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வல்லம்பேடு குப்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு எல்லப்பனின் ஆதரவாளர்களை மிரட்டி, அந்த கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இது தொடர்பாக வல்லம்பேடு குப்பம் கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் சரவணன், விக்னேஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தவிர, அசாம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story