அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்– அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்


அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்– அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 15 April 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்தார், நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்

புதுச்சேரி

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்– அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

அம்பேத்கரின் 126–வது பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சட்டமன்றம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தீப்பாய்ந்தான், தலைமை செயலாளர் மனோஜ்பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் முதல்–அமைச்சர் ராமச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் நீல.கங்காதரன், தேவதாஸ், வீரமுத்து, இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.

என்.ஆர்.காங்கிரசார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி., என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், பொதுச்செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க. சார்பில்...

தெற்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, அவைத்தலைவர் பலராமன், துணை அமைப்பாளர்கள் பெல்லாரி என்ற கலியபெருமாள், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பல்வேறு அமைப்புகள்

புதுச்சேரி மக்கள் இயக்கத்தினர் நிறுவன தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிவலோகநாதன், கதிரவரன், மாறன், வீரப்பன், கதிர், மணிவேல், சிவமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தர்மான், சிவா, லிங்கேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையிலும், புதிய நீதிக்கட்சியினர் தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் சஞ்சீவி, பொதுச்செயலாளர் சசிபாலன் ஆகியோர் தலைமையிலும், பாரதீய ஜனதா கட்சியினர் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், திராவிடர் கழகத்தினர் சிவ.வீரமணி தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர்கள் அமைப்பினரும் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story