பெண் பயணியை வழியனுப்ப வந்தவர் மீது தாக்குதல்: குடியுரிமை அதிகாரி மீது விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
பெண் பயணியை வழியனுப்ப வந்தவர் மீது தாக்குதல்: குடியுரிமை அதிகாரி மீது விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவு
ஆலந்தூர்
பெண் பயணியை வழியனுப்ப வந்தவரை தாக்கிய குடியுரிமை அதிகாரி மீது விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி விமான நிலைய போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
குடியுரிமை அதிகாரிகள் சோதனைசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த 8–ந் தேதி கொழும்பு செல்ல கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பெண் ஆஷாமோல் (வயது 32) என்பவர் வந்தார். அவரை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவரிடம், கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட்டும், சுற்றுலா விசாவும் இருந்தது. மேலும் அவரிடம் சவுதி அரேபியா செல்வதற்கான மற்றொரு விசாவும் இருந்தது.
சவுதி அரேபியா செல்ல அவருக்கு குடியுரிமை தடைசான்று பெற வேண்டும் என்பதால் சென்னையில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு தடைசான்று பெறாமல் செல்ல அவர் முயற்சி செய்ததாக அதிகாரிகள் நினைத்தனர்.
வழியனுப்ப வந்தார்இதையடுத்து ஆஷாமோலின் பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். மேலும் அவரை வழியனுப்ப வந்த கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சஜித் (47) என்பவரையும் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைதான 2 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களிடம், மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் விசாரித்தார். அப்போது சஜித், ஆஷாமோலை வழியனுப்ப வந்ததாகவும், ஆனால் தன்னை ஏஜெண்டு என நினைத்து குடியுரிமை அதிகாரிகள் கடுமையாக தாக்கிவிட்டதாகவும் கூறினார்.
இறுதி அறிக்கைகொழும்பு செல்ல தன்னிடம் முறையான ஆவணங்கள் இருந்தும் தன்னை கைது செய்து விட்டதாக ஆஷாமோல் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரையும் மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் விடுதலை செய்தார்.
மேலும் இதுபற்றி குடியுரிமை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் குடியுரிமை அதிகாரி, நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் மீது விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.