சென்னை வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் சிமெண்டு கலவை வெளியேறியது
வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் சுரங்க பணியால் சாலையில் சிமெண்டு கலவை வெறியேறியது. அடுக்குமாடி கட்டிடமும் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
ராயபுரம்,
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ வரை மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை கிழக்கு மேஸ்திரி தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் (வயது 30) என்பவரது வீட்டு வாசலில் திடீரென பூமிக்கு அடியில் இருந்து சிறிய பள்ளம் வழியாக சிமெண்டு கலவை வெளியேறியது.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அதில் ரசாயனம் கலந்து இருக்குமோ? என பயந்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கட்டிடம் அதிர்ந்ததுஅதேநேரத்தில் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடமும் அதிர்ந்தது. இதனால் அந்த குடியிருப்பில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி சாலைக்கு ஓடிவந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாலையில் வெளியேறி இருந்த கலவையை பார்த்தபோது, மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டும் பணியின்போது சிமெண்டு கலவை வெளியேறி இருப்பது தெரிந்தது.
இதுபற்றி மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மெட்ரோ ரெயில் ஊழியர்கள், சாலையில் வெளியேறிய சிமெண்டு கலவையை நீண்ட நேரம் போராடி அகற்றினர். சிமெண்டு கலவை வெளியேறிய பள்ளத்தையும் அடைத்தனர்.
இரவு நேரத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதி அடைந்த பொதுமக்கள், வீட்டுக்குள் செல்லாமல் வெளியே காத்து இருந்தனர். நீண்ட நேரத்துக்கு பின்னரே அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.