வங்கி ஊழியர் போல பேசி பெண் டாக்டரிடம் ரூ.41 ஆயிரம் மோசடி மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


வங்கி ஊழியர் போல பேசி பெண் டாக்டரிடம் ரூ.41 ஆயிரம் மோசடி மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x

வங்கி ஊழியர் போல பேசி பெண் டாக்டரிடம் ரூ.41 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் மினல் (வயது 27). பல் டாக்டர். இவரது கணவர் மத்திய பிரதேசத்தில் ராணுவ அதிகாரியாக உள்ளார். பல் டாக்டரின் செல்போனுக்கு கடந்த 10-ந் தேதி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசியவர், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து அழைப்பதாக கூறினார்.

மேலும் அவரின் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட சில விவரங்களையும் கூறினார். பின்னர் வங்கி கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என கூறிய அவர், அதற்காக டாக்டரின் ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண், சி.சி.வி. எண் ஆகியவற்றை கேட்டார். அவரும், வங்கி ஊழியர் தானே கேட்கிறார் என அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்.

ரூ.41 ஆயிரம் அபேஸ்

இந்தநிலையில் செல்போனில் பேசியவர் இணைப்பை துண்டித்த சில நிமிடங்களில் டாக்டர் மினலின் வங்கி கணக்கில் இருந்து ரூ.41 ஆயிரம் ஆன்லைன் வணிகம் மூலம் அபேஸ் செய்யப்பட்டது. இதற்கான குறுந்தகவல் செல்போனுக்கு வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து விசாரித்த போது வங்கி ஊழியர் போல பேசி மர்ம ஆசாமி டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.41 ஆயிரத்தை மோசடிசெய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அந்தேரி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர்கிரைம் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர். 

Next Story