நாசிக்கில் பயங்கரம் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை


நாசிக்கில் பயங்கரம் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2017 5:35 AM IST (Updated: 15 April 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

நாசிக்கில், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

நாசிக்,

நாசிக் ஜெக்தாப் மாலா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வசித்து வந்தவர் சுனில் (வயது 36). இவரது மனைவி அனிதா (32). இவர்களுக்கு சஞ்ஜிவினி (12), வைஷ்ணவி (6) என்ற 2 மகள்களும், தேவ்ராஜ் (4) என்ற மகனும் உள்ளனர்.

சுனிலும், அவரது மனைவி அனிதாவும் ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்ததாக தெரிகிறது. எனவே 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அனிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனைவி அதிர்ச்சி

இந்தநிலையில் சமீபத்தில் சுனில், அவரது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் காலை அனிதா சமையல் செய்து கொண்டு இருந்தார். காலை 11 மணிவரை குழந்தைகள் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர் குழந்தைகளை எழுப்ப சென்றார். அப்போது சுனில், குழந்தைகள் தூங்கட்டும் என கூறி மனைவியை படுக்கை அறைக்கு செல்லவிடாமல் தடுத்தார். தொடர்ந்து மாலை 6 மணிவரை குழந்தைகளை எழுப்பவிடாமல் அனிதாவை, சுனில் தடுத்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர் கணவரை தள்ளிவிட்டு படுக்கை அறைக்குள் சென்று பார்த்தார்.

அப்போது 2 குழந்தைகள் பேச்சு மூச்சின்றி கிடந்தது. மூத்த மகள் முனங்கியபடி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உதவி கேட்டு அலறினார். அந்த பகுதியில் நின்ற ஆட்டோ டிரைவர்கள், ரோந்து போலீசார் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். அதற்குள் சுனில் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டினார்.

2 குழந்தைகள் பலி

இதையடுத்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். இதை பார்த்த சுனில் பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீ வைத்தார். போலீசார் மற்றும் அங்கு இருந்தவர்கள் போர்வையை அவர் மீது போட்டு தீயை அணைத்தனர். பின்னர் அவரையும், குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். இதில் குழந்தைகள் வைஷ்ணவி, தேவ்ராஜ் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். சுனில், சஞ்ஜிவினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சுனிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை கொல்ல திட்டம்

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சுனில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அதன்படி, முதலில் அவர் வைஷ்ணவி, தேவ்ராஜை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் மூத்த மகள் சஞ்ஜிவினிக்கு அதிக தூக்கமாத்திரை கொடுத்துள்ளார். மகள் இறந்ததும் மனைவியையும் கொலை செய்ய முடிவு செய்து இருந்தார். ஆனால் அதற்குள் மனைவி அனிதா வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர்தப்பியுள்ளார்.

ஆனால் அவர் எதற்காக குழந்தைகள், மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை, 2 குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட பயங்கர சம்பவம் நாசிக் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story