வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ‘ஸ்டார்ஸ்’ தின விழா: கல்வியால் மட்டும் ஒரு மனிதனை மாற்ற முடியும் நடிகர் சூர்யா பேச்சு
கல்வியால் மட்டுமே ஒரு மனிதனை மாற்ற முடியும் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த ‘ஸ்டார்ஸ்’ தின விழாவில் நடிகர் சூர்யா பேசினார்.
வேலூர்,
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் ‘ஸ்டார்ஸ்’ தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், பதிவாளர் சத்யநாராயணன், மாணவர் நலன் இயக்குனர் மகேந்திரகார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மைய பேராசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார். ரூட்ஸ் இன்டஸ்டிரிஸ் இயக்குனர் சிந்தனை கவிஞர் கவிதாசன் எழுச்சியுரை ஆற்றினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகரம் அறக்கட்டளையின் நிறுவனரும், நடிகருமான சூர்யா கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு பெரிய உதாரணமாக இருக்க வேண்டும். அகரம் அறக்கட்டளையோடு, வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தையும் ஒன்றாக பார்க்கிறேன்.
பேராசிரியர்களை மறக்க கூடாதுஒரு விதைக்குள் எத்தனை மரங்கள், பழங்கள் உள்ளது என்பது தெரியாது. அதுபோல், உங்களை வீரியம் உள்ள விதைகளாக பார்க்கிறேன். வி.ஐ.டி.யில் படிக்கும் வாய்ப்பு மிகப் பெரிய ஆசீர்வாதம். கல்வியால் மட்டுமே ஒரு மனிதனை மாற்ற முடியும். யாரும் செய்ய முடியாத ஒன்றை விடா முயற்சியோடு செய்தால் வெற்றி கிடைக்கும். தினம் தினம் ஒரு புரிதல் வேண்டும். உங்களால் புதிய பாதையை அமைத்து கொள்ள முடியும். போட்டி அதிகமாக உள்ளது. தனி மனிதனாய் வெற்றி பெற முடியாது. உங்கள் வெற்றிக்கு பிறர் உதவியதை போலவே, பிறர் வெற்றிக்கு நீங்கள் உதவ வேண்டும்.
உலகில் எந்த உயரத்துக்கு சென்றாலும் நீங்கள் படித்த கல்வி நிறுவனங்களையும், பேராசிரியர்களையும் மறக்கக்கூடாது. வி.ஐ.டி.யின் ‘ஸ்டார்ஸ்’ மாணவர்கள் என்று கூறுவதை பெருமையாக கொள்ள வேண்டும். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னதாக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:–
ஏழை மாணவர்கள் உயர் கல்வி...வி.ஐ.டி.யில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ‘ஸ்டார்ஸ்’ திட்டம் எனக்கு மனநிறைவை தருகிறது. இந்த பல்கலைக்கழகம் பெரிய அளவில் வளர்ந்த பிறகு தொழில் அதிபர்கள், பணக்காரர்கள், பெரிய அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கின்றனர். நான் ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். வி.ஐ.டி.யில் என்னை போல யாரும் இல்லையே என்று நினைத்தேன். ஏழை, எளியவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் ‘ஸ்டார்ஸ்’ திட்டம்.
இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழர்கள் இருக்க வேண்டும். எல்லோரும் படிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காகவே ‘ஸ்டார்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுவரை ‘ஸ்டார்ஸ்’ திட்டம் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் ‘ஸ்டார்ஸ்’ திட்டமானது சென்னையையும் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளும் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி திட்டம்மேலும் வி.ஐ.டி.யின் அனைவருக்கும் உயர்கல்வி திட்டத்தின்கீழ் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். ஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு, பிறரை மதித்தல் உள்ளிட்ட அனைத்தும் கல்வியில் உள்ளது. நீங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நடிகர் சூரியாவுக்கு, வேந்தர் ஜி.விசுவநாதன் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் நடிகர் சூர்யா மாணவ, மாணவிகளுடன் ‘செல்பி’ எடுத்து கொண்டார்.
இதில் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் மூலம் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பயனடைந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வி.ஐ.டி. திட்ட அலுவலர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.