கடலாடி டாஸ்மாக் கடைக்கு பூட்டு தொடர்ந்து 5–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
கடலாடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் தொடர்ந்து 5–வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்,
உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளின் அருகே உள்ள மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் ஓரம் இருந்த டாஸ்மாக்கடைகள் அகற்றப்பட்டன. தற்போது அவற்றை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்கு பல்வேறு இடங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடலாடி பஸ் நிலையம் அருகே இயங்கி வந்த மதுபானக்கடையை, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரிக்கும் இடையே மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மாற்றி அமைத்தனர்.
தொடர் போராட்டம்அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிடாக்குளம், கடையாக்குளம், தேரங்குளம், நரசிங்ககூட்டம், உள்ளிட்ட கிராம பொதுமக்கள் நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக்கடை முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் 5–வது நாளான நேற்று கடைக்கு பூட்டுப்போட்டு, தாலிக்கு தங்கம் வழங்கும் தமிழக அரசே, எங்களின் தாலியை பறிப்பது ஏன்? என்று கோஷங்கள் எழுப்பி போரா£ட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடை முன்பு அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சத்தியமுர்த்தி, பார்வர்டு பிளாக், ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மயில்மணி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.