குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி பகுதியில் டா£ஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்று இடங்களை தேடி, அங்கு புதிதாக கடை அமைக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று குறிஞ்சிப்பாடி மற்றும் திட்டக்குடி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்விவரம் வருமாறு:–
குறிஞ்சிப்பாடிகுறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள சுப்புராயர் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதையறிந்த அந்த பகுதிகளில் ஒன்று திரண்டு விருத்தாசலம்–கடலூர் சாலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ஜான்சிராணி, குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், புதிதாக குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட கடையை உடனடியாக மூட வேண்டும். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்று, உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மறியலை பொது மக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக விருத்தாசலம்–கடலூர் சாலையில் சுமார் ½ நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பகுதியில் மூடப்பட்ட 2 டாஸ்மாக் கடைகளை, ராமநத்தம் சாலையில் தொழுதூரையொட்டி மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு திறக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதையறிந்த தொழுதூர், வைத்தியநாதபுரம், மேல்கல்பூண்டி, கீழ்கல்பூண்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரம் போராட்டம் நடத்திய அவர்கள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும், தங்களது கிராமங்களில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்றும் ராமநத்தம் போலீசில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.