9,52,847 குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை 1,95,868 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் உதயகுமார் பேச்சு
மதுரை மாவட்டத்தில் உள்ள 9,52,847 குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை 1,95,868 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது
மதுரை,
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இது தவிர அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விலையில்லா பேன், மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியினை முதல்–அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அதன்தொடர்ச்சியாக திருமங்கலத்தில் உள்ளவர்களுக்கு இங்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் 9 லட்சத்து 52 ஆயிரத்து 847 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் இதுவரை 1 லட்சத்து 95 ஆயிரத்து 868 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குறுஞ்செய்திவிழாவில் கலெக்டர் வீரராகவராவ் பேசும் போது கூறியதாவது:–
குடும்ப அட்டைதாரர்களின் அலைப்பேசி எண்ணுக்கு ஒரு கடவுச்சொல் குறித்த குறுஞ்செய்தி வரும். இந்த செய்தி வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தங்களுடைய குடும்ப அட்டை, அசல் ஆதார் அட்டை மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்ற அலைப்பேசியுடன் அந்தந்த நியாயவிலைக்கடைக்கு சென்று ஒப்புதல் பட்டியலில் கையொப்பமிட்டு ஸ்மார்ட் கார்டு பெற்று கொள்ளலாம்.
இதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதுவரை தங்களது அலைப்பேசி எண் பதிவு செய்யாதவர்கள் தங்களது நியாயவிலைக்கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு குறித்த குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றை தாலுகா அலுவலகத்திற்கு சென்று மாற்ற வேண்டிய அவசியமில்லை. இ–சேவை மையம் அல்லது இணையதளம் மூலமாக மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ரோகிணி ராம்தாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி, மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவா, வட்டாட்சியர் மலர்விழி, தாலுகா வழங்கல் அலுவலர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.