அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றிய போது பெண்கள் தீக்குளிக்க முயற்சி
பெத்தூர் கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பெத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி அனுமதியின்றி புதிதாக அம்பேத்கர் சிலை வைத்து பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அம்பேத்கர் சிலையை அகற்றுமாறு பொதுமக்களிடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலையை அகற்ற மறுத்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் உதவி கலெக்டர் கவிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், தாசில்தார் சரவணன் மற்றும் அரூர் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்ற அதிகாரிகள் முயன்றனர். இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலையை அகற்ற விடாமல் தடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் தீக்குளிக்க முயற்சிஅப்போது பெண்கள் மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்து சிலையை அகற்றினால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வைத்த அம்பேத்கர் சிலையை அகற்றி எடுத்து சென்று விட்டனர்.