சேலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சேலத்தில் குடிநீர் கேட்டு நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடுமையான வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாநகராட்சி பகுதியிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி 44–வது வார்டுக்கு உட்பட்ட களரம்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்தநிலையில், களரம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் குகை பகுதியில் உள்ள திருச்சி மெயின்ரோட்டிற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் உத்தரவாதம்இது குறித்து தகவலறிந்த கிச்சிபாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான முறையில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், களரம்பட்டி பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. தண்ணீருக்காக வேறு இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கிறது. எனவே, சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.