தாழ்வாக கருதாமல் வாழ்விலும், சமூகத்திலும் சாதிக்க திருநங்கைகள் முன்வர வேண்டும் போலீஸ் துணை கமி‌ஷனர் பேச்சு


தாழ்வாக கருதாமல் வாழ்விலும், சமூகத்திலும் சாதிக்க திருநங்கைகள் முன்வர வேண்டும் போலீஸ் துணை கமி‌ஷனர் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 10:42 PM IST)
t-max-icont-min-icon

தாழ்வு மனப்பான்மையை கைவிட்டு வாழ்விலும், சமூகத்திலும் சாதிக்க திருநங்கைகள் முன்வர வேண்டும்

சேலம்,

சேலம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் திருநங்கைகள் தினவிழா சேலம் அழகாபுரம் பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவி பூஜா தலைமை தாங்கினார். செயலாளர் கோபிகா, பொருளாளர் ரசிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேலம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் ஜோர்ஜி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மற்றும் சுயதொழில் செய்து வரும் 20 திருநங்கைகளை பாராட்டி பரிசுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த திருநங்கைகள் அனைவரும் முன்வர வேண்டும். அனைத்து மக்களுக்கும் உதவியாக இருக்க வேண்டும். மாதம் ஒருநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நீங்களே முன்வந்து நடத்தலாம். கேரளா மாநிலம் கொச்சியில் திருநங்கைகள் தாங்களாகவே வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். தற்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக களத்தில் பணியாற்றும் பிரித்திகா யாசினியை போல் ஒவ்வொரு திருநங்கைகளும் முன்னேற வேண்டும். இந்த நேரத்தில் மும்பையில் நடந்த உண்மை சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

அதாவது, தாய், தந்தையை இழந்த பெண் குழந்தையை திருநங்கை ஒருவர் தத்தெடுத்து வளர்த்தார். அந்த குழந்தையை அவர் டாக்டராக்க முயன்றார். ஆனால் அந்த குழந்தை நான் வக்கீலுக்கு படிப்பேன் என்றும், சமூகத்தில் தாழ்ந்து கிடக்கும் திருநங்கைகளை மேல்நிலைக்கு கொண்டு வருவேன் என்றும் கூறினார். எனவே, நம்மால் முடியாது என்று தாழ்வாக கருதாமல் வாழ்விலும், சமூகத்திலும் சாதிக்க திருநங்கைகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு துணை கமி‌ஷனர் ஜோர்ஜி ஜார்ஜ் பேசினார்.

கேக் வெட்டினர்

இந்தநிகழ்ச்சியில், டாக்டர் சுகவனம், ஏஞ்சலினா பெஞ்சமின், யோகேஷ் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், திருநங்கைகள் தினத்தை கொண்டாடும் விதமாக திருநங்கைகள் அனைவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.


Next Story