ஈரோட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது


ஈரோட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது
x
தினத்தந்தி 16 April 2017 3:15 AM IST (Updated: 16 April 2017 5:51 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது.

ஈரோடு,

தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்து போனதுடன் கோடை வெயிலின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஈரோட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் 106 டிகிரி வெயில் அடித்தது. ஆனால் நேற்று அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு தயங்கினர். அவசர வேலை இருந்தால் மட்டுமே பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியே சென்றார்கள். இதனால் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

அக்னி நட்சத்திரம்

இருசக்கர வாகனங்களில் சென்றபோது முகத்தில் அனல் காற்று பயங்கரமாக வீசியது. சிறிது தூரம் வெயிலில் நடந்து சென்றாலே பொதுமக்களுக்கு அதிகமான தாகம் எடுத்தது. இதனால் இளநீர், பதனீர், கரும்பு சாறு, குளிர்பானங்கள், ஜூஸ் வகைகள் போன்றவற்றை அவர்கள் விரும்பி சாப்பிட்டனர். இந்த பொருட்களின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதால் சாலையோரங்களில் புதிதாக கடைகள் முளைத்து உள்ளன.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரிப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மே மாதத்தில் மலைப்பகுதியான ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் தற்போது இருந்தே திட்டமிட்டு வருகிறார்கள்.


Next Story