என்ஜினீயரை கிண்டல் செய்ததாக தகராறு: இரு தரப்பினர் மோதல்; ஒரே குடும்பத்தில் 4 பேர் காயம் 6 பேர் மீது வழக்குப்பதிவு
உடன்குடியில் என்ஜினீயரை கிண்டல் செய்ததாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.
உடன்குடி,
உடன்குடியில் என்ஜினீயரை கிண்டல் செய்ததாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டிட என்ஜினீயர்தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 60). இவருடைய மனைவி மேரி (50). இவர்களுடைய மகன்கள் திவாகர் (32), தினகர் (30). திவாகர், கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராகவும், தினகர் கட்டிட என்ஜினீயராகவும் பணியாற்றி வருகின்றனர். தினகரன் கட்டுமான பணிக்கு சென்றபோது, அவரை உடன்குடி சாதரக்கோன்விளையைச் சேர்ந்த சிலர் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஜெயபால், சாதரக்கோன்விளைக்கு சென்று தன்னுடைய மகனை கேலி கிண்டல் செய்தவர்களை கண்டித்தார்.
இந்த நிலையில் சாதரக்கோன்விளையைச் சேர்ந்த கந்தன் (45), அவருடைய தம்பி கிருஷ்ணமூர்த்தி (40) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் ஜெயபாலின் வீட்டுக்கு சென்று, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகளை உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கினர்.
6 பேர் காயம்இதனை தடுக்க முயன்ற ஜெயபால், மேரி, திவாகர், தினகர் ஆகியோரையும் தாக்கினர். இதில் காயம் அடைந்த ஜெயபால் உள்பட 4 பேரையும் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த ஜெயபால், மேரி ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கந்தன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும், ஜெயபால் குடும்பத்தினர் தங்களை தாக்கியதாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், கந்தன், கிருஷ்ணமூர்த்தி, ஜெயபால், மேரி, திவாகர், தினகர் ஆகிய 6 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.