மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடலில் மூழ்கி பெலகாவியை சேர்ந்த மாணவ–மாணவிகள் 8 பேர் பலி


மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடலில் மூழ்கி பெலகாவியை சேர்ந்த மாணவ–மாணவிகள் 8 பேர் பலி
x
தினத்தந்தி 16 April 2017 3:00 AM IST (Updated: 16 April 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் சிந்துர்க் மாவட்டத்திற்கு கல்விச்சுற்றுலா சென்ற பெலகாவியைச் சேர்ந்த கல்லூரி மாணவ–மாணவிகள் 8 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.

மங்களூரு,

மராட்டிய மாநிலம் சிந்துர்க் மாவட்டத்திற்கு கல்விச்சுற்றுலா சென்ற பெலகாவியைச் சேர்ந்த கல்லூரி மாணவ–மாணவிகள் 8 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கல்வி சுற்றுலா

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹால்பவி கிராமத்தில் ஒரு தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த 60 மாணவ–மாணவிகள் நேற்று முன்தினம் மராட்டியத்திற்கு கல்விச்சுற்றுலா சென்றனர். நேற்று காலையில் அவர்கள் மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு சென்றனர்.

அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த அவர்கள் பின்னர் வெய்ரி கடற்கரைக்கு சென்றனர். அங்கு மாணவ–மாணவிகள் அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ஒரு ராட்சத அலையில் 11 மாணவ–மாணவிகள் சிக்கினர். அவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

8 மாணவ–மாணவிகள் பலி

இதைப்பார்த்த மற்ற மாணவர்களும், அவர்களுடன் சென்ற பேராசிரியர்களும் அலறி துடித்தனர். பின்னர் இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்களை மீட்டனர்.

மீதி 8 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். அதில் 5 பேர் மாணவர்கள். 3 பேர் மாணவிகள். கடலில் மூழ்கி பலியான 8 மாணவ–மாணவிகளின் உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக சிந்துதுர்க் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் அவர்கள் பெலகாவியில் இருந்து சிந்துதுர்க் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றனர். மாணவ–மாணவிகள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து அறிந்த கல்லூரி நிர்வாகத்தினரும், சக மாணவ–மாணவிகளும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த சம்பவம் குறித்து சிந்துதுர்க் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story