ஏழாயிரம்பண்ணை பகுதியில் கடும் வறட்சி நீர் நிலைகள் வறண்டதால் வெளிநாட்டு பறவைகள் வரவில்லை
ஏழாயிரம்பண்ணை பகுதியில் கடும் வறட்சியினால் நீர்நிலைகள் வறண்டு போனதால் ஆண்டுதோறும் வரும் வெளி நாட்டு பறவைகள்
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரம் பகுதியில் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாட்டிலிருந்து இனப்பெருக்கத்திற்காக கூழக்கடா செங்காநாரை பறவைகள் இங்கு வரும். இவை புளியமரங்களில் கூடுகட்டி வசிக்கும். மார்ச் மாதத்தில் வரும் இந்த பறவைகள் ஆகஸ்டு மாதம் குஞ்சுகள் பொரித்து அவை பறக்க தொடங்கியதும் தங்களது தாய் நாட்டுக்கு குஞ்சுகளோடு சென்று விடும்.
ஆகஸ்டு மாதம் வரை இங்கு முகாமிடும் பறவைகள் மரங்களில் கூடு கட்டி அருகிலுள்ள வல்லம்பட்டி கண்மாய், வெம்பக்கோட்டை அணை, இருக்கன்குடி அணையில் மீன்களை உணவாக கொள்ளும். அங்கிருந்து குஞ்சுகளுக்கும் உணவினை கொண்டு வரும். இந்த பறவை மரங்களில் கூடு கட்டி இருக்கும்போது உள்ளூர் பறவைகளான மயில். காகம் போன்றவற்றை அந்த மரங்களில் அமர அனுமதிக்காது.
ஒத்துழைப்பு
இந்த பறவைகளை சங்கரபாண்டியாபுரம் கிராமத்தினர் விருந்தினர்களைப்போல பாதுகாப்பார்கள். யாரும் அங்கு வந்து வேட்டையாட விடமாட்டார்கள். இந்த பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக பட்டாசு வெடிப்பதை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். சிறுவர்கள் கல் எறிந்து தொந்தரவு செய்து விடக்கூடாது என்பதிலும் உஷாராக இருப்பார்கள்.
ஆண்டாண்டு காலமாக வெளிநாட்டு பறவைகள் வந்து சென்று சரணாலயமாக இருந்த இந்தப்பகுதிக்கு இந்த ஆண்டு பறவைகள் இதுவரை வரவில்லை. கண்மாய், ஊருணி, அணை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இதனை தெரிந்து கொண்டதாலோ என்னவோ இந்த ஆண்டு பறவைகள் இதுவரை வரவில்லை என்று அந்த கிராமத்தினர் தெரிவித்தனர். கோடை விடுமுறையின் போது இந்த பறவைகளை வேடிக்கை பார்ப்பதை பலரும் வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் இந்த வருடம் பறவைகள் வராதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறினார்கள்.